கார்ட்டோகிராஃபி கலவரம்
By Ram Sridhar
14-ம் நூற்றாண்டு மேப் ஒன்று காணாமல் போகிறது. அது தன்னுடையது என்றும் அதை மீட்டுத் தர வேண்டும் என்றும் சொல்லி ஆனா ஃபெரைரா எனும் வெளிநாட்டுப் பெண் கணேஷ் / வஸந்த் ஆகியோரின் உதவியை நாடுகிறார். ..
பயப்பட வேண்டாம்.
கார்ட்டோகிராஃபி (Cartography) என்பது வரைபடங்களைப் பற்றிப் படிப்பது. வரைபடங்கள் என்று குறிப்பிடுவது, மேப் பற்றி என்று தெரியாதவர்களை பசித்த புலி தின்னட்டும்.
மும்பை காலா கோடா (கறுப்புக் குதிரை) ஃபோர்ட் பகுதியைச் சேர்ந்த அஸ்டா குரு எனும் பிரபல ஏல நிறுவனத்தின் அலுவல வாசலில் நுழைந்தபோது கணேஷின் மொபைல் அழைத்தது.
"எஸ்?" என்று கணேஷ் கேட்டவுடன், மறுமுனை உயிர்பெற்று,
"கணேஷ், ஆனா ஃபெரைரா கொலாபா ஏரியாவில் உள்ள தாஜ் வெலிங்டன் ம்யூஸ் ஹோட்டலில் இருந்து பேசுகிறேன். கிளம்பி விட்டேன். இன்னும் சிறிது நேரத்தில் அஸ்டாகுரு அலுவலகத்தை அடைந்து விடுவேன்" என்று தெளிவான ஆங்கிலத்தில் அந்தப் பெண் கூறியதும்,
"வி வில் வெயிட் ஃபார் யூ" என்றான் கணேஷ்.
'பாஸ், அந்தப் பொம்பள வர்றதுக்குள்ள இங்க ஒரு கடைல மசாலா பொரி நல்லா இருக்கும். சாப்பிடலாம்" என்றான் வஸந்த்.
"மசாலா பொரி எல்லாம் நம்ம பிரதமர் மோடி மாதிரி பெரிய ஆளுங்க சாப்பிடறது. எங்கேயாவது நல்ல காஃபி கிடைக்குதான்னு பார்க்கலாம்" என்றான் கணேஷ் புன்னகையுடன்.
===============================
ஆனா ஃபெரைரா கோவாவில் தற்காலிகமாக வசிக்கும் ஒரு கோடீஸ்வரி. அவளுடைய லிஸ்பன் (போர்ச்சுகல் நாட்டின் தலைநகர்) வீட்டிலிருந்து விலைமதிப்பில்லாத பழைய மேப் ஒன்று சில மாதங்கள் முன்னர் திருடு போய்விட்டது.
திருடு போவதற்கு முதல் நாள்தான் அதை லிஸ்பன் காப்பகத்தில் (Archive) சேர்த்து விடலாம் என்று ஆனா நினைத்திருந்தாள். ஆனால், அவள் லிஸ்பனை அடைந்தபோது அவளுக்குக் கிடைத்த முதல் செய்தியே அந்த மேப்பை முதல் நாளிரவு யாரோ திருடி விட்டார்கள் என்பதுதான்.
14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த vellum எனப்படும் பதப்படுத்தப்பட்டிருந்த மாட்டுத் தோலில் வரையப்பட்ட மேப் அது. கான்டினோ பிளானிஸ்ஃபியர் (Cantino Planisphere) எனப்படும் அந்த மேப் அப்போது போர்ச்சுகீஸிய கடற்பயணிகளால் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளின் கடல் பிரதேசங்களைக் குறிப்பிடும் அந்த மேப் இன்னமும் நல்ல நிலையில் இருப்பதால் பழம் பொருட்களை சேர்க்கும் கோடீஸ்வரர்கள் மத்தியில் அதற்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
ஹேர்லூம் எனப்படும் தனது தலைமுறையைச் சேர்ந்த பொருளை விற்பதில் ஆனாவுக்கு விருப்பமில்லை. அது பத்திரமாக இருக்க வேண்டிய இடம் லிஸ்பன் காப்பகம்தான் என்று தீர்மானித்து, அதற்கு வழங்குவதற்கு முன்னால் அது திருடப்பட்டு விட்டது.
இப்போது, சில மாதங்கள் கழித்து அந்த மேப் மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனமான அஸ்டா குருவில் ஏலத்திற்கு வருகிறது என்று தெரிந்தவுடன், தனது நண்பரும், ஸ்காட்லான்ட் யார்டிலிருந்து இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்ற ஹெண்டர்சன் மூலம் கணேஷ் பற்றிக் கேள்விப்பட்டு அவனை அழைத்தாள் ஆனா.
தான் ஒரு வழக்கறிஞர் என்றும், தனக்கும் பழைய கால மேப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கணேஷ் முதலில் மறுத்தாலும், தனது ப்ரியா கேஸில் மறக்க முடியாத, தற்போது ஸ்காட்லான்ட் யார்டிலிருந்து ஓய்வு பெற்ற, ஹெண்டர்சன் சொன்னதால், அது பற்றிய விவரங்களைக் கேட்க, ஒப்புக் கொண்டான் கணேஷ்.
வஸந்தும் அவனும் கோவா சென்று வர உடனே விமான டிக்கெட்டுகள் கணேஷுடைய வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்ததும் ஆனா பேசுவது சீரியஸான விஷயம் என்பதை கணேஷால் உணர முடிந்தது.
கோவா என்றதும் வஸந்த் உடனே சரி என்று சம்மதித்தான்.
நியூட் பீச்சஸ் எனப்படும் நிர்வாண கடற்கரைகள் இந்தியாவில் சட்டப்படி கிடையாது என்றாலும், ஆரம்போல், கக்கோலம், மோரிஜிம் போன்ற கடற்கரைகள், அதிகம் இந்திய சுற்றுலா பயணிகள் வராத ஒதுக்குப்புறமானவை என்பதால், அங்கே பொன்னிறமாக வெயிலில் வறுபட, வருடாவருடம் வரும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்த சீமாட்டிகள் லஜ்ஜை எதுவுமின்றி கடற்கரையில் (கிட்டத்தட்ட) நிர்வாணமாகப் படுத்திருப்பார்கள் என்பது வஸந்த்திற்குத் தெரிந்த விஷயம்.
எப்படியாவது ஒரு கடற்கரையில் இப்படிப்பட்ட காட்சியைப் பார்த்துவிட்டால் ஜென்ம சாபல்யம் என்பது வஸந்த் வாதம்.
கணேஷ் இது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவது இல்லையென்றாலும், வஸந்த் தன்னுடன் வருவதற்காக ஒழிந்து போகட்டும் என்று இருவரும் விமானம் ஏறும் முன்னர் இதற்கு அனுமதி கொடுத்திருந்தான்.
=========================
2023-ல் புதிதாகத் திறக்கப்பட்ட மனோகர் இன்டர்நேஷனல் ஏர்போட்டிலிலிருந்து வெளியே வந்தபோது, தன்னுடைய பெயர் தாங்கிய அட்டையுடன் காத்திருந்த டிரைவரை கண்டுகொண்டு, அவனுடைய வெள்ளை நிற மெர்ஸிடிஸ் காரில் ஏறிக்கொண்டு, சால்செட் கடற்கரையில் அமைந்திருந்த செயின்ட் ரீஜிஸ் ரிஸார்ட்டை அடைந்து, அவர்களுக்கென தயாராக இருந்த அறையில் நுழைந்ததும் வஸந்த் பிரமித்தான். விஸில் அடித்தான்.
'பாஸ், பெட் எவ்ளோ பெரிசு! நாலு குட்டிங்களோட உருளலாம் போலிருக்கே" என்றவனை முறைத்த கணேஷ்,
"கொஞ்ச நேரத்துல அந்த ஆனா ஃபெரைரா வந்துடுவா. கொஞ்சம் சீக்கிரம் ரிஃப்ரெஷ் பண்ணிக்கிட்டு ரெடியாகலாம். அப்புறம் உன்னோட குரங்கு வேலையை எல்லாம் வெச்சுக்கலாம்" என்றான்.
"உங்க வேலையை நீங்க பாருங்க பாஸ்,. என் வேலை எனக்கு" என்று புன்னகைத்தான் வஸந்த்.
====================
ஆனா ஃபெரைராவைப் பார்த்தவுடன் அவளுடைய செல்வச் செழிப்பு தெரிந்தது. Elegant என்கிற ஆங்கில வார்த்தைக்கு பொருள் சொல்வது போல ஜாஜ்வல்யமாக இருந்தாள்.
கணேஷ் - வஸந்த் இருவரையும் பார்த்து அவளுடைய கோடி ரூபாய் புன்னகையை உதிர்த்துவிட்டு,
"உங்கள் பயணம் நல்லபடியாக இருந்ததா?" என்றாள் செப்பனிடப்பட்ட ஆங்கிலத்தில்.
கணேஷ் புன்னகைத்தபடி, தலையை ஆட்டி,, அவளை உட்காரச் சொன்னான்.
அவள், தனக்கு சௌத் இந்தியன் ஃபில்டர் காஃபி வேண்டும் என்றவுடன், கணேஷ் வஸந்தைப் பார்க்க, அவன் அறையிலிருந்த தொலைபேசியை நாடினான்.
சிறிது நேரத்தில், காஃபிக்குப் பிறகு நேரடியாக விஷயத்தைப் பேச ஆரம்பித்தாள் ஆனா.
"மும்பை அஸ்டா குரு நிறுவனத்தில் நான் குறிப்பிட்ட மேப் ஏலத்திற்கு வருகிறது. அதை யார் எடுத்தாலும், என்ன விலைக்கு வாங்கினாலும், நான் அதற்கு மேல் 10% சேர்த்து தந்து விடுகிறேன்.
என்னுடைய பரம்பரை சொத்து அது என்பதற்கு என்னிடம் நிரூபணங்கள் உள்ளன. மேலும் அதை நான் இன்ஷ்யூர் செய்துள்ளதால், கிட்டத்தட்ட எனக்கு அதன் இன்றைய மதிப்பில் நஷ்டஈடு கிடைத்து விடும்" என்று சொல்லி, அங்கிருந்த மேசை மீது பல தெளிவான படங்களை கடை விரித்த ஆனா, தன்னிடமிருந்த ஒரு பென் டிரைவை வஸந்திடம் தந்து, "இதில் ஒரு வீடியோ உங்கள் பார்வைக்கு உள்ளது" என்று சொல்லிவிட்டு, தன்னுடைய கைப்பையிலிருந்த செக் புத்தகத்தில் ரூ.50 லட்சம் என்று எழுதி அலட்சியமாகக் கையெழுத்திட்டு, அந்த செக்கை கணேஷிடம் நீட்டினாள்.
"இது அட்வான்ஸ். மீதி, அந்த மேப் என் கையில் வந்த பிறகு தருகிறேன்" என்றாள் புன்னகையுடன்.
காலி கோப்பையை தன் நாற்காலி அருகே இருந்த டீப்பாயில் வைத்த கணேஷ், "ஆனா, உங்களுடைய தொலைத்து போன அந்த மேப் பற்றி சற்று சொல்லுங்கள்" என்றான்.
வஸந்தும் அருகேயிருந்த நாற்காலியில் அமர்ந்து கொள்ள, தொண்டையைச் செருமிக் கொண்ட ஆனா,
"1463-ம் ஆண்டு - ஒரு பத்து வருடம் முன்/பின் இருக்கலாம் - தயாரிக்கப்பட்ட மேப் அது. போர்ச்சுகீஸிய கார்ட்டோகிராஃபர்கள் தயாரித்த மிக முந்தைய கால மேப் அது. ஏறக்குறைய முதல் மேப் என்று கூட கூறலாம்....."
இடைமறித்த வஸந்த், "ஏலத்தில் அது என்ன விலைக்கு வரும் என எதிர்பார்க்கிறீர்க்ள்?" என்றான்.
"இந்திய ரூபாயில் சுமார் 15 முதல் 20 கோடி வரை போகலாம். பழம் பொருட்கள் சேகரிப்பவர்கள் நடுவில் அதற்கு நடுவில் நல்ல டிமாண்ட் உள்ளது" என்ற ஆனா ,
'சுமார் 14 முதல் 16-ம் நூற்றாண்டு காலம் வரை மாரிடைம் மேப்கள் தயாரித்த கலையை ஐபீரியன் கார்ட்டோகிராஃபி (Iberian Cartography) என்பார்கள். முக்கியமாக, இந்தக் கலை அப்போதைய லிஸ்பன் நகரில் பரவலாக நடைமுறையில் இருந்தது. அப்போது, என்னுடைய தந்தை வழி முன்னோர்கள் இதில் தலைசிறந்து விளங்கினார்கள் என்று என் தந்தை சொல்லக் கேட்டுள்ளேன்" என்றாள் தொடர்ந்து.
சிறிது நேரம் மேலும் விவரங்களைச் சொல்லிவிட்டு, மும்பையில் சந்திப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு அகன்றாள் ஆனா.
====================================
ஆனா அவளுடைய டிரைவர் மற்றும் உதவியாளர் சகிதம் உள்ளே நுழைய, அவள் டிரைவர் கையில் மேப்பின் அசல் தன்மையை ஆராய மல்டி ஸ்பெக்ட்ரல் இமாஜிங் கிட் ஒன்று சற்றே பெரிய போர்ட்டபிள் டிவி அளவில் எடுத்துக் கொண்டு வந்து,, வரவேற்பறையில் இருந்த நீளமான மேசை மீது வைத்து, ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்தால், அதை அருகிலிருந்த பவர் போர்டில் இணைத்தான்.
ஏலம் ஆரம்பித்தவுடன் முதலில் வந்த ஐட்டமே ஆனா குறிப்பிட்ட மேப் என்பதால், கடைசி விலையாக 18 கோடியில் முடிந்தது. அதை வாங்கிய
வெள்ளைக்காரரை கணேஷ் மெதுவே அணுகி, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஆனாவைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்ல, அந்த ஆசாமி கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு தன்னை ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த ரெனாட்டோ வர்கா என அறிமுகம் செய்து கொண்டு, ஆனாவை அணுகினான்.
இருவரும் மிக மெதுவாக பேசிக்கொண்டிருக்க,
கணேஷும், வஸந்தும் சற்று தூரத்திலிருக்கும் சோபாவில் அமர, கணேஷின் மொபைல் அழைத்தது.
தனியே சற்று தூரம் சென்று பேசிவிட்டு வந்த கணேஷை ஆனா அழைக்க, வஸந்தும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.
"கணேஷ், இந்த மேப்பை ரூ. 18 கோடிக்கு வர்கா வாங்கியுள்ளார். கூடுதலாக 10% சேர்த்து, அதை ரௌண்ட் ஆக, 20 கோடியாகத் தருகிறேன் என்று சொல்கிறேன், அவரு குறைந்தது 30 கோடி வேண்டும் என்று சொல்கிறார்" என்றாள் படபடப்பாக.
அருகே ஆறேகால் அடி உயரத்தில், நீல நிறக் கண்களுடன், சுமார் 40 வயதிருக்கும் வர்கா புன்னகைத்து, "நான் இதற்காக மிகவும் மென்ககெட்டு இந்தியா வந்துள்ளேன். என்னுடைய நேரத்திற்கான ப்ரீமியம் தான் மேலே கேட்கும் 12 கோடி" என்றான் புன்னகையுடன்.
கணேஷ் அவனைப் பார்த்து புன்னகைத்து விட்டு, ஆனாவிடம், "இதோ என் நண்பர் நஸிகேத் சின்ஹா வந்துவிட்டார்" என்று சொல்லவே, ஆனாவும், வார்க்கவும் புரியாமல் பார்த்தார்கள்.
"நஸிகேத் சின்ஹா எகனாமிக் அஃபன்ஸ் இலாகாவைச் சேர்ந்த அதிகாரி" என்றான் கணேஷ் புன்னகையுடன்.
கணேஷ் வர்காவைப் பார்த்து புன்சிரித்துவிட்டு, 'நீங்களே இந்த மேப்பை ஆனாவின் லிஸ்பன் வீட்டிலிருந்து ஆள் வைத்து திருடி, இந்தியாவுக்கு ப்ளாக் சானல் வழியாக அனுப்பிவிட்டு, அஸ்டா குரு நிறுவனத்திடம் உண்மையை மறைத்து, வேறு யாருடைய பொருளோ அது எனும் வகையில் பொய்யான கதையைத் தயாரித்து, அவர்களை நம்ப வைத்து, ஏமாற்றி, விலையை ஒப்பந்தம் செய்து, வாங்குவது போல வாங்கிவிட்டு, இப்போது, ஆனாவிடம் 30 கோடிக்குப் பேரம் பேசுகிறீர்கள்.
இது முடியவில்லை என்றால், வேறொரு அமெரிக்க பையரிடம் இதே விலைக்கு ஏற்கனவே பேசி வைத்து விட்டீர்கள்.
இதெல்லாம் உங்களுடைய ஈ ஓ கீழேதானே வரும் மிஸ்டர் சின்ஹா?" என்று கேட்க,
அவர் புன்னகைத்து, அருகே இருந்த போலீஸ்காரரிடம் "அரெஸ்ட் ஹிம்" என்று சொல்லி, பொருளாதார குற்றத்திற்கான சிறப்பு வாரண்டையும் நீட்டினார்.
"நான் லாயர்தான். நீங்கள் ஹங்கேரியைச் சேர்ந்தவர் என்றாலும், இங்கே, இந்தியாவில் நடக்கும் ஏலத்தில் பங்கு கொண்டு, உங்களுடைய இந்திய நண்பர் மூலம், இந்திய ரூபாயில் இதை வாங்க முன் வந்ததால், உங்களை இங்கே, இந்தியாவில் எகனாமிக் அஃபன்ஸ் குற்றத்திற்காக கைது செய்ய முடியும்.
விசாரணைக்குப் பிறகு, நீங்கள் ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டுக்கு அனுப்பப்பட்டு, தண்டனை அங்கே உங்களுக்கு நிறைவேற்றப்படும்" என்றான் கணேஷ் தெளிவான குரலில்.
வஸந்த் கணேஷ் அருகே வந்து, "இந்த ஏற்பாடு எல்லாம் எப்போ பாஸ் செஞ்சீங்க?" என்று வியப்புடன் கேட்க,
'நீ மசாலா பொரி சாப்பிடப் போனியே அப்போ" என்றான் கணேஷ் புன்னகையுடன்.
= => = => = = > = =>
எழுத்தாளர் சுஜாதாவிற்கு பெரிய எழுத்தில் நன்றியுடன் ராம் ஸ்ரீதர் (Ram Sridhar)......
=============================






